கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

வெள்ளகோவிலில் கடையின் பூட்டை உடைத்து 10 புது செல்போன்களை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-07 17:08 GMT

வெள்ளகோவிலில் கடையின் பூட்டை உடைத்து 10 புது செல்போன்களை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

10 செல்போன்கள் திருட்டு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி ரஷீல் நகரைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டவுன் முத்தூர் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார்.

கடந்த 30-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற பயாஸ் அகமது, மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த பயாஸ் அகமது கடைக்குள் சென்று பார்த்தபோது கடை ஷோகேசில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 10 புது செல்போன்கள் திருட்டுப் போனது தெரியவந்தது. இது பற்றி வெள்ளகோவில் போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று வெள்ளகோவில் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா, குயவர்பாளையத்தை சேர்ந்த திருமுருகன் (19) என்பது தெரியவந்தது.

மேலும் வெள்ளகோவில் பாரதியார் வீதியில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்ததும், செல்போன் கடையின் பூட்டை உடைத்து 10 செல்போன்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து திருமுருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 புது செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்