ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-12-25 20:10 GMT

முன்விரோதம்

திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி அருகே உள்ள கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பிரகாஷ்(வயது 23). அதே பகுதியை சேர்ந்த நல்லேந்திரனின் மகன் அறிவழகன்(30). இவர்கள் உறவினர்கள் ஆவார்கள்.

மேலும் 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் மரியாதை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அறிவழகனை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஜாமீனில் வெளியே வந்தார்

இந்த கொலை வழக்கில் பிரகாஷ், ஆனந்த், மதியழகன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ேமலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அறிவழகனின் பெரியப்பா மகனான அசோக்(35), பிரகாஷை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அசோக், அவரது நண்பர்கள் 2 பேருடன் பிரகாசை வழிமறித்து, அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

வெட்டிக்கொலை

அவரை விரட்டிச்சென்ற அசோக் உள்ளிட்டோர், பிரகாசை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக பிரகாஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பழிக்குப்பழியாக...

இதையடுத்து பிரகாசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அசோக் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

முன் விரோதத்தில் பழிக்குப்பழியாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்