மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
நாட்டறம்பள்ளி அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.
மீன் பிடிக்க சென்றார்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே குனச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சிங்காரவேலன் (வயது 35), கூலி ெதாழிலாளி. இவருக்கு திருமணமாகி திலகவதி என்ற மனைவி உள்ளார்.
சிங்காரவேலன் தனது மனைவியை நேற்று முன்தினம் சேலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நாட்டறம்பள்ளி அருகே செட்டேரி டேம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் மீன்பிடிக்க சிங்காரவேலன் சென்றார்.
நீரில் மூழ்கி பலி
அப்போது சிங்காரவேலன் மீன்களை பிடிப்பதற்காக வலையை எடுத்துக்கொண்டு சென்றார். வலையை விட்டுவிட்டு கரைக்கு வரும்போது திடீரென நீரில் மூழ்கினார். உடன் வந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதையடுத்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பரிசல் படகு மூலம் சிங்காரவேலனை தேடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அதன் பின்னர் மாலை 5 மணியளவில் 7 மணி நேரம் போராடி சிங்காரவேலன் உடலை பிணமாக மீட்டனர்.
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.