போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்

போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்; இதுகுறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-02-26 18:45 GMT

புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.

'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி'

என்கிறார், வள்ளுவர்.

போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.

போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப்பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதைக் காண முடிகிறது.

நீதிமன்றம் தடை

போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப்பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை சவைத்து உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.

சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது:-

'பான்பராக், குட்கா போன்றவை புற்றுநோய்க்கு ஆதாரமாக இருப்பதுடன், பிறர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவும் இருக்கிறோம். தற்போது இருக்கும் சட்டத்தால் இதனை தடை செய்ய முடியவில்லை என்றால், எந்த வழியிலும் திரும்பவும் விற்பனைக்கு வந்து இளைய சமுதாயத்தினரை பாதிக்காத வகையில், சட்டசபையில் விவாதித்து புதிய சட்டத்தை கொண்டு வரவும் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்து உள்ளார்' என்றார்.

மனக்கட்டுப்பாடு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய், உளவியல் மற்றும் புகையிலை தடுப்பு மைய துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன் வீரைய்யா கூறும்போது:-

'நம் நாட்டில் புகையிலையால்தான் 40 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது. புகையிலையில் பல வகைகள் இருந்தாலும் வாயில் மெல்லும் வகை புகையிலை முன்பு கிடையாது. கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பரவலாக புழக்கத்தில் வந்து உள்ளது. இங்கு தயாரிப்பு இல்லை என்றாலும் அதிகமான பேர் இதற்கு அடிமையாகி உள்ளனர். புகைப்பிடிப்பதால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் வாயில் மெல்லும் புகையிலையால் அதனை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக வாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைகிறது. அத்துடன் வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பழக்கம் உள்ளவர்கள் சரியான நேரத்தில் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெறாமல், முற்றிய நிலையில் சந்திப்பதால் நோயை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பான்பராக், குட்கா போன்ற போதை பாக்குகள் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் வந்தால் மருத்துவ சிகிச்சையும், மருத்துவமனையில் தங்கி இருக்கும் காலமும் அதிகம் தேவைப்படும். போதைப்பாக்குகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இளைய தலைமுறையை தான் இலக்காக கொண்டு விற்பனை செய்கின்றனர். இளைய சமுதாயத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு இதன் விற்பனையை அடியோடு நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமும் மனக்கட்டுப்பாடுடன் இருந்து ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க அனைவரும் முன்வர வேண்டும்' என்றார்.

நாமக்கல்லை சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் குழந்தைவேல் கூறியதாவது:-

போதைப்பொருட்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வகையான வேதிப்பொருள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணர்வும், சந்தோஷமும் கிடைப்பதாக அதை பயன்படுத்துவோர் தெரிவிக்கிறார்கள். போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சு திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவு குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. போதைப்பொருட்களில் வேதிப்பொருட்கள் அதிகஅளவு கலப்பதால், சிலர் மன நோயாளியாகவும் மாறுகின்றனர்.

நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடுவிளைவிக்கும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதோடு, அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்த்து, தகுந்த சிகிச்சை அளித்து மீட்டெடுக்க வேண்டும்.

சுகாதார சீர்கேடு

நாமக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்செல்வன்:-

இன்றைய இளைஞர்களிடையே பான்பராக், குட்கா பயன்பாடு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இவை தடை செய்யப்பட்டு இருந்தாலும் கள்ள மார்க்கெட்டில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவது சமூக விரோத செயல் என்றே கூறலாம். பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துகளை வாயில் போட்டு, கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

பெரும்பாலும் பஸ்நிலையங்களில் போதை வஸ்துகளை பயன்படுத்தி எச்சில் துப்பி வைப்பது மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது. எனவே தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களான பான்பராக், குட்கா போன்றவற்றை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்களை காவல் துறையும், அரசு அதிகாரிகளும் கண்டறிந்து, கைது செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை பயன்பாட்டில் இல்லை என்றாலே, அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்கள் இல்லாமல் போவார்கள். இதை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

உடல் நலத்திற்கு கேடு

எருமப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ்:-

டிரைவர்களுக்கு தூக்கம் தான் எமன். ஒரு நொடி கண் அசைந்தால் உயிரே போய்விடும். எனவே தூக்கம் வராமல் இருப்பதற்காக பாக்கு வகைகளை ஒரு சில டிரைவர்கள் பணியின்போது பயன்படுத்துகின்றனர். அவர்கள் இந்த வகை பாக்குகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்பதை உணருவது இல்லை.

எனவே நான் டிரைவர்களிடம் ஆரோக்கியம் கெட்டு போகாமல் இருப்பதற்காக பாக்குகளுக்கு பதிலாக ஆரஞ்சு மிட்டாய் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பொதுவாக குழந்தைகள் சொன்னால், அவர்கள் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எனவே விழிப்புணர்வுக்கு குழந்தைகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்