காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்

பெண்ணாடம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-09 20:10 GMT

பெண்ணாடம், 

காதல் திருமணம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகள் நாகவள்ளி (வயது 24). இவரும் அதே ஊரை சேர்ந்த சரவணன் (26) என்பவரும் காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் சுபாஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.

நாகவள்ளி நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினரிடம் வெளியில் சென்று வருகிறேன் என கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

பிணமாக தொங்கினார்

இந்த நிலையில் நாகவள்ளி நேற்று காலை சவுந்தரசோழபுரம் மெயின் ரோட்டின் அருகே மோட்டார் கொட்டகை முன்பு உள்ள புங்க மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவருடைய 2 கால்களும் முட்டி போட்ட நிலையில் காணப்பட்டது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற அக்கிராம மக்கள் இதுபற்றி சரவணன் குடும்பத்தினருக்கும், பெண்ணாடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிந்த நாகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இதுகுறித்து கலியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகவள்ளி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். மேலும் நாகவள்ளியை யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்