இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்

நெல்லையில் குடோனுக்குள் புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகளும், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2023-10-03 21:31 GMT

இளம்பெண் கொலை

நெல்லை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா (வயது 18). இவர் நெல்லை டவுன் கீழ ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள பேன்சி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

சந்தியா நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மதியம் கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுப்பதற்காக சந்தியா, காந்திமதி அம்மன் சன்னதி அருகில் உள்ள குடோனுக்கு சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற 17 வயது வாலிபர், குடோனில் வைத்து கத்தியால் சந்தியாவை வெட்டிக் கொலை செய்தார்.

காதலை ஏற்க மறுப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் நெல்லை டவுனில் உள்ள கடையில் ஊழியராக வேலை செய்தார். அவர், சந்தியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து சந்தியாவை வெட்டிக் கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் சந்தியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், கிராம மக்கள் நேற்று காலையில் பேட்டை- சேரன்மாதேவி சாலையில் கல்லூரி பஸ் நிறுத்தம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கூறுகையில், 'கொலை செய்யப்பட்ட சந்தியாவிற்கு நீதி வேண்டும். குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை விட கூடுதல் நிதி வழங்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராடவிடர் நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர், போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் அரசு வேலைக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்திய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உள்ள அனைத்து உதவிகளையும் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து பெற்றுத் தருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உரிய நிவாரணம், வேலை வாய்ப்பு, நீதி கிடைப்பதில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். அதுவரை சந்தியாவின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த சாலை மறியல் போராட்டம் மாலை 3 மணி வரை நீடித்தது.

போக்குவரத்து மாற்றம்

இதன் காரணமாக நெல்லையில் இருந்து அம்பை, முக்கூடல், வீரவநல்லூர், பத்தமடை, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம், திருப்பணிகரிசல்குளம், கொண்டாநகரம் வழியாகவும், இதேபோல் அம்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள் சுத்தமல்லி விலக்கு, நரசிங்கநல்லூர், பேட்டை போலீஸ் நிலையம் வழியாகவும் நெல்லைக்கு திருப்பிவிடப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்