திருமணமான 15 நாளில் வாலிபர் பலி

பண்ருட்டி அருகே ஆட்டோ-மொபட் மோதிய விபத்தில் திருமணமான 15 நாளில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். கோவிலுக்கு சென்ற பெண்ணும் பலியானார்.

Update: 2022-06-28 18:24 GMT

புதுப்பேட்டை:

பண்ருட்டி அருகே உள்ள கட்டியாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி புஷ்பா(வயது 45). இவர் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மலர்கொடி, பாக்கியலட்சுமி, ரமணி, சிவகாமி, நிஷாந்தி, சின்னப்பொண்ணு, செண்பகம் ஆகியோர் அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை ஹரிதாஸ் ஓட்டினார். எதிரே கோட்லாம்பாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சதீஷ்(29) மொபட்டில் வந்தார். புதுப்பேட்டை சாலை அம்மாபேட்டையில் ஆட்டோவும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த சதீஷ், புஷ்பா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

7 பெண்கள் காயம்

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்கொடி, பாக்கியலட்சுமி, ரமணி உள்ளிட்ட 7 பெண்கள், ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ், புஷ்பா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 15 நாளில்...

இதில் விபத்தில் பலியான சதீசுக்கும், ஆனத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 13-ந் தேதிதான் திருமணம் நடந்துள்ளது. பெயிண்டரான சதீஷ், தனது மனைவியை ஆனத்தூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார். அவரை மீண்டும் கோட்லாம்பாக்கத்திற்கு அழைத்து வருவதற்காகத்தான் சதீஷ் மொபட்டில் சென்றார். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான 15 நாளில் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்