புகையிலை விளைச்சல் அமோகம்

இடையக்கோட்டை பகுதியில் புகையிலை அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது.

Update: 2022-12-17 17:02 GMT

புகையிலை சாகுபடி

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கிற மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். குறிப்பாக புகையிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி இடையக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஜவ்வாதுபட்டி, சோளியப்பகவுண்டனூர், வெரியப்பூர், கேதையுறும்பு, திப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.

புகையிலை விதை வாங்கி வந்து நடவு செய்த 40 முதல் 50 நாட்களில் நாற்றுகள் உற்பத்தியாகிறது. தனியார் உற்பத்தி செய்யும் நாற்றுகளை, ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வீதம் ரூ.1,800-க்கு விவசாயிகள் வாங்கி நடவு செய்கின்றனர். 120 நாட்களில் புகையிலை செடிகளில் மகசூல் பெறலாம்.

அமோக விளைச்சல்

பிற பயிர் சாகுபடியை காட்டிலும், புகையிலை விவசாயத்துக்கு குறைந்த அளவே செலவு ஆகிறது. இதனால் புகையிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இடையக்கோட்டை பகுதியில் தற்போது புகையிலை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இன்னும் 2 மாதங்களில் புகையிலை அறுவடைக்கு தயார் ஆகும்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், பல்வேறு இடங்களில் புகையிலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விலைகுறையும் பட்சத்தில், புகையிலையை அறுவடை செய்து பதப்படுத்தி விலை உயரும் போது விற்பனை செய்யலாம்.

குறைந்த விலைக்கு கொள்முதல்

வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், தோட்டங்களுக்கே நேரில் சென்று விவசாயிகளிடம் புகையிலையை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் வியாபாரிகள் ஒன்று கூடி பேசி, விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் புகையிலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கிறது.

விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி

இதேபோல் தமிழகத்திலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைப்பது மட்டுமின்றி விவசாயிகளின் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் அய்யமில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறைந்த செலவில் நிறைந்த லாபம் கிடைக்கும் பயிராக புகையிலை விளங்குகிறது. கடந்த ஆண்டு பச்சை புகையிலை ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையானது. மேலும் காயவைத்த ஒரு கிலோ புகையிலை ரூ.95 முதல் ரூ.150 வரை வியாபாரிகள் வாங்கினார்கள். இந்த வருடம் விளைச்சல் குறைந்ததால், கடந்த ஆண்டைவிட கூடுலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்