புளி விளைச்சல் அமோகம்

கறம்பக்குடி பகுதிகளில் புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

Update: 2023-04-08 17:53 GMT

தமிழ் மக்களின் உணவு பழக்கங்களில் புளிப்பு சுவை இன்றியமையாதது. வீடுகளில் அன்றாட உணவு பயன்பாட்டிற்கு புளியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மீன்குழம்பு, வத்தல் குழம்பு, புளியோதரை, துவையல் உள்ளிட்ட உணவு வகைகளுக்கு புளி பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தமிழ்நாட்டிற்கான புளி தேவை சாலையோரங்களில் உள்ள மரங்களில் இருந்தே கிடைக்கிறது. ஒரு சில பகுதிகளில் புளியங்கன்றுகளை நட்டு தோப்பாக உருவாக்கி புளி விவசாயமும் நடைபெறுகிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் சாலையோரங்களில் இருந்த புளிய மரங்களில் கிளைகள் முறிந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக புளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கிளைகள் வளர்ந்து மரங்களில் புளி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. சாலையோர மரங்களில் புளி மகசூலை ஏலம் எடுத்தவர்கள் தற்போது அறுவடைப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். கொத்து கொத்தாக அடர்த்தியாக புளி விளைந்துள்ளதால் மகசூல் அதிகரித்து விலையும் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு விதை நீக்காத புளி கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் விதை நீக்கிய புளி கடந்த ஆண்டு ரூ.130-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொதுவாக ஒரு ஆண்டிற்கு வீட்டிற்கு தேவையான புளியை அறுவடை காலத்தில் வாங்கி வைப்பது கிராம பகுதிகளில் வழக்கம். விலை குறைந்து உள்ளதால் தேவையான புளியை வாங்கி இல்லத்தரசிகள் இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். கறம்பக்குடி பகுதியில் புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, ஆத்தியடிப்பட்டி, வாண்டான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் புளி வியாபாரிகள் அதிகம் உள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட புளியம்பழங்களின் ஓடு மற்றும் விதை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தயார் செய்யப்பட்ட புளி நகர பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து புதுப்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகமானதால் தற்போது விலை குறைந்து உள்ளது. 2 மாதங்களுக்கு பின்னர் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்