மாங்காய் விளைச்சல் அமோகம்

பட்டிவீரன்பட்டி பகுதியில், மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-06-20 16:56 GMT

பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, தேவரப்பன்பட்டி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புனல்காடுகள், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் மாம்பழ சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இருப்பது வழக்கம். பிப்ரவரி மாத இறுதியில் மரங்களில் பூக்கள் பூக்கும். பின்னர் மே, ஜூன் மாதங்களில் மாம்பழ சீசன் களைகட்டும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாம்பழ சீசன் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

பட்டிவீரன்பட்டி பகுதியில் கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், காளைபாடி, கருங்குரங்கு, சப்பட்டை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாங்காய் வகைகள் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாங்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது. காய்க்காத உயர்ரக மாங்காய்கள் கூட இந்த ஆண்டு அதிக அளவில் காய்த்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாங்காய்களை கொள்முதல் செய்வதற்காக அய்யம்பாளையம், சித்தரேவு, எம்.வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகள் குடோன் அமைத்துள்ளனர். அங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த மாங்காய்களை சேமித்து வைத்து, அவற்றை சென்னை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, மராட்டியம், குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி மாம்பழ கூழ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்