கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-09-21 17:32 GMT

மணமும், மருத்துவ குணமும் கொண்டது, கொத்தமல்லி தழை. சமையலில் தவிர்க்கமுடியாத இந்த கொத்தமல்லி தழை, தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்துள்ளது.

கடந்த 100 நாட்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட கொத்தமல்லி தழை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. பல்வேறு இடங்களில் கொத்தமல்லி தழை அறுவடை செய்யப்பட்டு கம்பம், தேனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்ட வியாபாரிகள் இங்கு நேரிடையாக வந்து கொத்தமல்லி தழையை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கொத்தமல்லி தழை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொத்தமல்லி தழை வரத்து அதிகரித்ததால் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் கொத்தமல்லி தழையை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.80 வரை விற்பனையாகிறது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்