சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 5,272 பேர் எழுதினர்

சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 5,272 பேர் எழுதினர்

Update: 2022-06-25 13:32 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை 5,272 பேர் எழுதினர்.

சப்-இன்ஸ்பெக்டர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து 444 இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு நேற்று காலை முதன்மை தேர்வும் தொடர்ந்து மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,891 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத சூலூர் ஆர்.வி.எஸ். கல்லூரி, கோவில்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி, மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் கல்லூரி, கவுண்டம்பாளையம் கொங்கு நாடு கல்லூரி என 4 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு மையத்திற்கு காலை 7 மணி முதல் தேர்வர்கள் வரத்தொடங்கினர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக தேர்வர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

தேர்வு நடைபெற்ற 4 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வர்கள் தவிர மற்றவர்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வை 5,272 பேர் எழுதினர். 1,619 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டனர்.

தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தேர்வறைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

தேர்வர்கள் அடையாள அட்டை, அழைப்பு கடிதம், பேனா ஆகிய 3 மட்டுமே தேர்வர்கள் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கோவை கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற தேர்வை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்