உலக முதலீட்டாளர்கள் மாநாடு நமது பயணத்தின் முக்கிய மைல்கல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.;
சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.
நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024. 'எல்லோருக்கும் எல்லாம்; 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி என்ற நமது பயணத்தின் இது முக்கிய மைல்கல்!. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.