நகை மோசடி வழக்கில் தொழிலாளியின் மாமனாரும் சிக்கினார்

விழுப்புரத்தில் நகை மோசடி வழக்கில் கைதான தொழிலாளியின் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-16 18:45 GMT

நகை மோசடி

விழுப்புரம் குபேரத்தெருவை சேர்ந்தவர் தீபக், வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் குமரன், சண்முகம். இவர்கள் நகை தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்தசக்திவேல் (வயது 39) என்பவரிடம் சிறு, சிறு நகைகளை செய்வதற்காக அவ்வப்போது தங்கக்கட்டிகளை கொடுத்து நகைகளை செய்து பெற்று வந்தனர்.

கடந்த மே மாதம் தீபக், சக்திவேலிடம் 450 கிராம் எடையுள்ள தங்க கட்டியையும், குமரன் 200 கிராம் எடையுள்ள தங்க கட்டியையும், சண்முகம் 1,600 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியையும் கொடுத்துள்ளனர். அதைப்பெற்ற சக்திவேல் நகைகளை செய்து கொடுக்காமல் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவானார்.

மேலும் ஒருவர் கைது

இதுகுறித்து தீபக் உள்ளிட்ட 3 பேரும் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் சென்னையில் பதுங்கியிருந்த சக்திவேலை மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சக்திவேலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது மாமனார் தியாகராஜன்(58) வீட்டில் பதுங்கியிருந்ததும், தங்கக்கட்டிகளை அவரிடம் சக்திவேல் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த தியாகராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்