தொழிலாளி தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த தாய் சாவு
ராமநத்தம் அருகே தொழிலாளி தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் மனைவி காந்தி (வயது 54). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அவருடைய மகன் தொழிலாளியான செல்வக்குமார்(35) மதுபோதையில் வந்தார். பின்னர் அவர் காந்தியிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார், அருகில் இருந்த அலுமினிய அன்னக்கூடையால் காந்தியை சரமாரியாக தாக்கினார்.
கொலை வழக்காக மாற்றம்
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.