விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சாவு

ஆரல்வாய்மொழியில் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சாவு

Update: 2023-02-18 18:45 GMT

ஆரல்வாய்மொழி, 

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் அருகே உள்ள 4 வழிச்சாலையில் கடந்த 12-ந் தேதி இரவு ஒரு வாலிபர் படுகாயங்களுடன் கிடந்தார். அவரது அருகே ஒரு ஸ்கூட்டர் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் வந்தவர் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சுயநினைவின்றி கிடப்பது ெதரிய வந்தது. தொடர்ந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்கூட்டரை கைப்பற்றி போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் விபத்தில் சிக்கியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி அழகியநகரை சேர்ந்த நந்தினி (வயது26) என்ற பெண் கணவரை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தார். அப்போது அங்கு கணவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் நிற்பதை பார்த்து அடையாளம் கூறினார். அப்போதுதான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் நந்தினியின் கணவர் அருண்குமார் (34), கூலி தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இதற்கிடையே சிகிச்சையில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டர் மீது ஏதாவது வாகனம் மோதியதா? அல்லது அருண்குமார் தவறி விழுந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

(படம் உண்டு) 

Tags:    

மேலும் செய்திகள்