"மணிமுத்தாறில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்"- கலெக்டர் விஷ்ணு தகவல்

“மணிமுத்தாறில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்” என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

Update: 2022-10-20 19:09 GMT

அம்பை:

"மணிமுத்தாறில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்" என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

மணிமுத்தாறு பூங்கா

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வசதி பெறுகிறது. குடிநீருக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணையானது காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது ஆகும். இந்த அணையை கட்டும்போதே அணையின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், சிலைகள், காட்சி கோபுரம், மான், மிளா, மற்றும் பாம்பு பண்ணைகள், ஓய்வுக்கூடம் போன்ற அம்சங்களுடன் பூங்கா உருவாக்கப்பட்டு இருந்தது.

ஆனால் காலப்போக்கில் அதாவது கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்கா முறையான பராமரிப்பின்றி, சிலைகள் சிதிலமடைந்து புதர்மண்டி, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் இந்த பூங்கா மேம்படுத்தப்பட்டு பல்லுயிர் பூங்காவாக அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பல்லுயிர் பூங்கா அமைய இருக்கும் இடத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பல்லுயிர் பூங்காவுடன் சேர்ந்து மாணவர்களுக்கான அறிவியல் பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து பொழுதுபோக்கு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

மணிமுத்தாறு அணை பகுதியில் உள்ள பூங்கா நெல்லை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த பூங்கா உருவாக்கப்பட உள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி கலெக்டர்

இந்த ஆய்வின் போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், நீர்வளத்துைற என்ஜினீயர் மாரியப்பன், சுற்றுலா அலுவலர் மாரியப்பன், சீதாராமன், அம்பை தாசில்தார் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய குருதி கொடை தினம்

முன்னதாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் அமைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு, முகாம் அமைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குருதி ஏற்றுத்துறையின் தலைவர் டாக்டர் மணிமாலா, ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் ரவிசங்கர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் அமலவாணன், மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் ரத்த வங்கி குழுமம் ரத்ததான முகாம் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்