முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

பாளையங்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது

Update: 2022-08-30 21:41 GMT

பாளையங்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) நெல்லை வருகிறார்.

இதையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் விழா நடைபெறுகிறது. அங்கிருந்து நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

முன்னேற்பாடு பணிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது.

விழாவையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மைதானத்தை தயார் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி மைதானத்தில் உள்ள புற்கள் அகற்றப்பட்டு மேடு, பள்ளங்கள் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சமதளப்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே முதல்- அமைச்சர் பங்கேற்கும் விழாவில் பிரமாண்ட மேடை அமைப்பதற்காக பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி

மேலும் ஆயிரக்கணக்காண பார்வையாளர்கள் அமரும் வகையில் அவர்களுக்கு தேவையான இருக்கைகளும் லாரிகள் மூலம் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விழா மைதானத்தில் பொது மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. விழாவில் பங்கேற்க வருபவர்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக "பார்க்கிங்" வசதிகளும் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்