சாலையோரம் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சிபகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது. பின்னர், அப்புறப்படுத்தப்படாத கைவிடப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் போக்குவரத்து போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று எழும்பூரில் உள்ள டாக்டர் நாயர் சேவை சாலையில் நீண்ட காலமாக கேட்பாரற்று கிடந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிபகுதிகளில் ஓராண்டு காலமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவோம் என தெரிவித்திருந்தோம். இதுவரை ஆயிரத்து 308 வாகனங்களை அப்புறப்படுத்த கணக்கெடுத்துள்ளோம். சிலர் தாங்களே முன்வந்து அவர்களின் வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டார்கள். மீதம் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளோம்.
நீதிமன்ற வழக்கு இல்லாத வாகனங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் ஏலத்தில் விடஉள்ளோம். கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும்போது போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுகிறது.
நாங்கள் அப்புறப்படுத்தும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் சரியான காரணம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்போம். வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.