பொங்கலுக்கான மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம்
அன்னவாசல், ஆவுடையார்கோவில் பகுதிகளில் பொங்கலுக்கான மண் பானை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள்தான் தமிழ் கலாசாரத்தின் வெளிப்பாடாகவும் விவசாயிகளின் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்களில் வரை இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மண் பானை முதல் பித்தளை பானை வரை பயன்படுத்தி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர்.
பெரும்பாலும் கிராமப்புற மக்கள் மண் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்துவிடும். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், அதனை சுற்றியுள்ள பகுதிகளான வாதிரிப்பட்டி, திருவேங்கைவாசல், புல்வயல், இடையப்பட்டி, புங்கினிபட்டி, குடுமியான்மலை, பொய்கால்பட்டி, தாண்றீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களிமண்களை பதப்படுத்தி, பானைகள் தயாரித்து உலர வைக்கின்றனர். பின்பு சூளை அமைத்து, சுட வைத்து, தண்ணீர் பட்டாலும் சேதமடையாதவாறு தயார் படுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தமாக வாங்கி செல்கின்றனர்
அன்னவாசல் பகுதிகளில் கலை நுணுக்கத்துடனும் பல்வேறு வடிவங்களிலும் மண்பானைகள் தயார் செய்யப்படுவதால் இது தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர தண்ணீர் தொட்டிகள், மண் அடுப்புகள், சட்டிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர்.
பொங்கல் ருசியாக இருக்கும்
மண்பாண்ட தொழிலாளி அயராவதி:- பொங்கல் பண்டிகையன்று முன்பெல்லாம் மண்பானை வைத்துதான் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள். மண்பானையில் சமைக்கும் பொங்கல் ருசியாக இருக்கும். தற்போது நகர்ப்புற மக்கள் கியாஸ் அடுப்பிலும், மண்எண்ணெய் அடுப்பிலும், சில்வர் மற்றும் பித்தளை பாத்திரத்திலும் பொங்கல் வைக்கின்றனர். ஏழை மக்களும் பழமையை மறக்காதவர்களும் தான் மண்பானையில் பொங்கல் வைக்கின்றனர். முன்பெல்லாம் 3 நாட்களுக்கு புதுப்பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இருந்தது. தற்பொது ஒருநாள் மட்டும் பொங்கல் வைக்கின்றனர். இதனால் மண்பானை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.
களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
மண்பாண்ட தொழிலாளி கணபதி:- பொங்கல் பண்டிகைக்கு சட்டி மற்றும் பானைகள் தயாரிப்பதும், 6 மாத பொருளாதார தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தடையில்லாமல் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான களிமண் எடுப்பதற்கு அரசு தடையில்லாமல் அனுமதி வழங்க வேண்டும். மேலும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பானை, சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரிக்க முடியாமல் வேதனை அடைந்துள்ளோம்.
ஆவுடையார்கோவில்
இதேேபால் ஆவுடையார்கோவில் அருகே காராகுடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களிமண் எடுத்து மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட மண்பானைகளை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் மண்பானைகள் செய்ய களிமண் எடுத்து வந்து பானைகள் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.