ஆனைமலையில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு வயல்களில் நாற்று நடும் பணி மும்முரம்

ஆனைமலை பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு வயல்களில் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-03 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு வயல்களில் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெல் சாகுபடி

ஆனைமலை ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 400 ஏக்கரில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு வழியாக பாசன வசதி வழங்கப்படுகிறது.

முதல் ேபாகத்தில் அறுவடை நெருங்கிய சமயத்தில் வடகிழக்கு பருவமழையால் வயல்வெளிகளில் களைச்செடிகள் அதிகரித்தது. இதனால் நெல் உற்பத்தி குறைந்ததோடு மழைநீரில் வைக்கோல் முற்றிலும் நனைந்து வீணானது. இதனால் ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

மழையால் நஷ்டம்

இந்த நிலையில் தற்போது 2-ம் ேபாகத்திற்கு விவசாயிகள் தங்களது விளைநிலங்களை டிராக்டர் மூலம் உழுது, மாட்டு வண்டிகள் மூலம் பரம்படித்து தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வயல்களில் நாற்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு முறைப்படி சாகுபடி செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக நேரடி நெல் விதைப்பு முறையை பின்பற்றி வருகிறோம். முதல் போகத்தில் அறுவடை சமயத்தில் மழையால் நஷ்டம் ஏற்பட்டது. சுமார் 4 ஏக்கர் விளைநிலத்தை தயார் செய்து, அறுவடைக்கு பின் நெல்லை கொள்முதல் மையம் வரை கொண்டு செல்ல ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகிறது.

கூடுதல் அறுவடை எந்திரம்

வழக்கமாக முதல் போகத்தில் சராசரியாக ஏக்கருக்கு 1,800 கிலோ வரை நெல் விளைச்சல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவ மழையால் 1,500 கிலோ மட்டுமே நெல் கிடைத்தது. மேலும் வைக்கோலும் மழைநீரில் நனைந்து வீணானது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ஏற்கனவே நெல் விவசாயிகள் பலரும் ஆட்கள் பற்றாக்குறையால் மாற்று விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். எனினும் மீதமுள்ள விவசாயிகள் 2-ம் போக நெல் சாகுபடிக்கான பணியை தொடங்கியுள்ளோம். இதற்கிடையில் அரசு ஆரம்பித்த நேரடி நெல் கொள்முதல் மையத்தில் 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு 45 ரூபாய் கூடுதலாக வசூல் செய்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மானியம் அடிப்படையில் அறுவடை காலத்தில் கூடுதல் அறுவடை எந்திரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்