விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை யொட்டி விழுப்புரம் பகுதியில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2023-09-10 18:45 GMT

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தற்போது ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் அருகே அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், அரசூர், சித்தலிங்கமடம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான கைவினை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விதிவிதமான வடிவங்கள்

சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்டபல்வேறு அவதாரங்களில் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் அழகிய கலைநயத்துடன் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி

தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வைத்து வழிபாடு நடத்த விநாயகர் சிலைகளை வாங்க முன்பதிவு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்