திருச்சி மலைக்கோட்டை உச்சியில் செப்புக்கொப்பரையில் மெகா திரியை நிறுவும் பணி கயிறு திடீரென அறுந்ததால் பரபரப்பு
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இரும்பு கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய செப்புக்கொப்பரையில் திரியை நிறுவும் பணி நேற்று நடந்தது. அப்போது, கயிறு அறுந்து திரி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இரும்பு கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய செப்புக்கொப்பரையில் திரியை நிறுவும் பணி நேற்று நடந்தது. அப்போது, கயிறு அறுந்து திரி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகை தீபத்திருவிழா
திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்திபெற்ற தாயுமான சுவாமி கோவில் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இதையொட்டி உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு இரும்பு கோபுரத்தில் உள்ள செப்புக்கொப்பரையில் 300 மீ்ட்டர் அளவு உள்ள மெகா திரி வைக்கப்பட்டு 900 லிட்டர் அளவில் எண்ணெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
திரி தயாரிக்கும் பணி
இதையொட்டி கடந்த 25-ந்தேதி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மறுநாள் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மெகா திரி தயாரிக்கும் பணி தாயுமான சுவாமி கோவில் அருகே தொடங்கியது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மெகா திரியை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு இரும்பு கோபுரத்தில் உள்ள செப்புக்கொப்பரையில் நிறுவும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதற்காக தாயுமான சுவாமி கோவிலில் இருந்து மெகா திரியை கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு தூக்கி வந்தனர். அத்துடன் சுமார் 50 எண்ணெய் டின்களும் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.
உச்சியில் இருந்து கீழே விழுந்த திரி
பின்னர் காலை 10.45 மணிக்கு மெகா திரியை இரும்பு கோபுரத்தின் உச்சிக்கு கயிறு கட்டி ஏற்றும் பணி தொடங்கியது. மெகா திரி கோபுரத்தின் உச்சிக்கு சென்ற நேரத்தில் அது கட்டப்பட்டு இருந்த கயிறு திடீரென அறுந்து, மெகா திரி கீழே விழுந்தது.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதிதாக கயிறு வாங்கி வரப்பட்டு, மதியம் 1.40 மணிக்கு பூஜைகள் செய்து மீண்டும் மெகா திரி மேலே ஏற்றப்பட்டது.
சிவனடியார்கள் கலக்கம்
பின்னர், கார்த்திகை தீப கொப்பரையில் மெகா திரியை வைத்து நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்பட 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி ஊற வைக்கும் பணி நடைபெற்றது. வருகிற 6-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்தன்று அங்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதற்கிடையே உச்சிப்பிள்ளையார் சன்னதி முன் இரும்பு கோபுரத்தின் உச்சியில் மெகா திரியை ஏற்றும் போது, கயிறு அறுந்து மெகா திரி கீழே விழுந்ததால் ஏதேனும் அபசகுணமாக இருக்குமோ என்று சிவனடியார்கள் கலக்கத்தில் உள்ளனர்.