சுற்றுலா தலங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தமிழகத்தில் பிரபலமடையாத சுற்றுலா தலங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2022-11-29 18:40 GMT

தமிழகத்தில் பிரபலமடையாத சுற்றுலா தலங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

ராணிப்பேட்டை பாரதி நகரில் தமிழ்நாடு ஓட்டல் அமைந்துள்ளது. இதனை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு, ஓட்டலில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கிய சுற்றுலாத்தலமாக...

நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பிற்கு, ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்காற்றுகின்றது. கொரோனா கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை, முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கி வருகின்றது. இதன் காரணமாக 2021-ம் ஆண்டில் 11 கோடியே 53 இலட்சத்து 36 ஆயிரத்து 719 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 57 ஆயிரத்து 621 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் என மொத்தம் 11 கோடியே 53 இலட்சத்து 94 ஆயிரத்து 340 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாவை மேம்படுத்த முதல்-அமைச்சர் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தினார். இதன் காரணமாக மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் உலகளவில் அதிக முக்கியத்துவம் பெற்று, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகின்றது.

நேரடியாக...

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக ஒட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 53 இடங்களில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை (தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில்) சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாகவே செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு தற்போது 28 ஓட்டல்கள் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 23 தங்கும் விடுதிகளை மீட்டெடுத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராணிப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டல் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 24 தங்கும் அறைகளுடன் அமைந்துள்ளது. இந்த ஓட்டல் தனியார் ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டு இயங்கி வந்ததது. தற்போது ஒப்பந்தம் நிறைவடைந்து, இந்த ஓட்டலை அரசே ஏற்று நடத்துவதற்காக இதனை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தவதற்கான சாத்திய கூறுகள், புதிய வசதிகளை கொண்டு வருவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கண்டறியும் பணிகள்

இங்குள்ள அறைகள், உணவகம், பார் ஆகியவற்றில் உள்ள குறைகளை, மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ. 70 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. தற்போது இங்கு 16 அறைகள் தயார் நிலையில் உள்ளது, மீதமுள்ள 8 அறைகள், உணவகம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் ஒரு சிறந்த புதுமையான, நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு ஓட்டல் அமையும்.

தமிழகத்தில் பிரபலமடையாத சுற்றுலா தலங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது வரையில் 300 இடங்களை கண்டறிந்துள்ளோம். முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த சுற்றுலாத் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 10 முதல் 15 சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்து அதனை மேம்படுத்தி, புனரமைத்து, சுற்றுலா சார்ந்த அம்சங்களை கொண்டு வரப்போகின்றோம்.

ஏலகிரி, ஜவ்வாதுமலை, கொள்ளிமலை ஆகிய இடங்களில் 5 ஏக்கர் பரப்பளவு இடத்தினை, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றி அதில் 2.5 ஏக்கர் பரப்பளவில் பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் முரளி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளமுருகன், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் கருப்பையா, நகர மன்ற உறுப்பினர் வினோத், பூங்காவனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்