மண்டைக்காடு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது

ஹைந்தவ சேவா சங்க மாநாட்டுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து மண்டைக்காடு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-02-23 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

ஹைந்தவ சேவா சங்க மாநாட்டுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து மண்டைக்காடு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.

மண்டைக்காடு கோவில்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் கொடை நிறைவடைகிறது. இந்த மாசி திருவிழாவில் 85 வருடமாக ஹைந்தவ சேவா சங்கம் நடத்தி வந்த சமய மாநாட்டை இந்த வருடம் அறநிலையத்துறை நடத்தும் என அறிவிக்கப்பட்டதால் ஹைந்தவ சேவா சங்கம் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை எதிர்த்து இந்து அமைப்பினர், பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைந்தவ சேவா சங்கத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். அதே சமயத்தில் பதிலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

பந்தல் அமைக்கும் பணி

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள், அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதில் ஹைந்தவ சேவா சங்க மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் இந்து அறநிலையத்துறையின் பங்களிப்பும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

சமய மாநாடு விவகாரத்தில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள் வழக்கம் போல் சமய மாநாடு நடத்த கோவில் அருகில் பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்