மாநகராட்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு

மாநகராட்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு

Update: 2023-08-08 19:30 GMT

கோவை

காலிகுடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிமனு அளித்தனர்.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரதாப் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் வார்டு பிரச்சினைகள், குடிநீர் பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

நஞ்சுண்டாபுரம், உப்பிலியன் திட்டு பகுதியில் உள்ள அரிஜன குடியிருப்பு பெண்கள் குடிநீர் குழாய் அமைத்து தர கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்து மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினை குறித்து அவர்கள் கூறியதாவது:-

நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கு முன் பொது குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் மேம்பால பணிகளுக்காக குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கு மீண்டும் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லாததால் முன்னாள் கவுன்சிலர் ஏற்பாட்டின் மூலம் நடமாடும் கழிப்பிடம் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதுவும் பழுதடைந்துள்ளது. எனவே நிரந்தர பொது கழிப்பிடம் வேண்டும். சாக்கடை வடிகால் வசதியும் சரியில்லாததால் கொசுக்களினால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சம்பள பிரச்சினை

மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் ஒப்பந்த பணியாளர்களாகபணியாற்றும் ஊழியர்கள் நேற்று மனு அளித்தனர். அதில் கடந்த 13 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதந்தோறும் சம்பளம் அளிப்பதில்லை. தற்போது 2 மாத சம்பளம்நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், மாதந்தோறும் முறையாக சம்பளம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அளித்தனர்.

இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதிகாரிகளுக்கு மேயர், ஆணையாளர் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்