பெண்ணின் வங்கி கணக்குகளை முடக்கி ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் மீட்பு

மயிலாடுதுறை வாலிபரிடம் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த பெண்ணின் வங்கி கணக்குகளை முடக்கி ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-09-06 18:45 GMT

மயிலாடுதுறை வாலிபரிடம் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த பெண்ணின் வங்கி கணக்குகளை முடக்கி ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 37) என்பவர் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தேசிய சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தான் திருமணத்திற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தேன். 32 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அதில் அறிமுகமாகி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார்.

ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் மோசடி

பின்னர் அந்த பெண் தன்னுடைய நகைகள் அடமானம் வைத்திருப்பதாகவும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால் அவசரமாக பணம் தேவை என்றும் என்னிடம் கூறி பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் தான் போன் செய்தபோது போனை துண்டித்து, சுவிட்ச் ஆப் செய்து பேச மறுத்து ஏமாற்றியுள்ளார். ஆசைவார்த்தைகள் கூறி மோசடி செய்து ஏமாற்றிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் இழந்த பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

வங்கி கணக்குகள் முடக்கம்

இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை அடையாளம் கண்டனர். தொடர்ந்து பணம் அனுப்பப்பட்ட சென்னையில் உள்ள தனியார் வங்கிகளில் அந்த பெண்ணின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து மணிகண்டனுடைய பணம் மீட்கப்பட்டது.

இதேபோல் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் தொடர்புடைய மோசடி வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முடக்கம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மோசடி வலையில் பலியாக வேண்டாம்

இதேபோல் பொதுமக்கள் யாரும் மோசடி வலையில் பலியாக வேண்டாம். அதன் உண்மை தன்மையை உறுதி செய்து செயல்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் பதற்றப்படாமல் துரிதமாக கட்டணமில்லா அழைப்பு எண்ணான 1930 தொடர்புகொண்டு புகார் அளிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீசார் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்