விழுப்புரத்தில்தீக்குளித்த பெண் போலீஸ் ஏட்டு சாவு
விழுப்புரத்தில் தீக்குளித்த பெண் போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காதல் திருமணம்
விழுப்புரத்தை அடுத்த கஞ்சனூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). இவர் கடந்த 2014-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அம்பலப்பட்டியை சேர்ந்த மணிமேகலை (39) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மணிமேகலை கடந்த 2006-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
தற்போது போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த மணிமேகலை, சென்னை, திருவல்லிக்கேனி உள்ளிட்ட மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்தான் சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு இடமாறுதலாகி வந்துள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஜெயகவுரி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு மிதுன்சாய், நித்தேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பெண் ஏட்டு தற்கொலை முயற்சி
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி காலை வீட்டின் சமையல் அறைக்கு சென்ற மணிமேகலை, அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த மணிமேகலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்ப பிரச்சினை காரணமாக மணிமேகலை தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.