மொபட்டில் இருந்து கீழே விழுந்த பெண், டிராக்டர் மோதி பலி
மொபட்டில் இருந்து கீழே விழுந்த பெண், டிராக்டர் மோதி உயிரிழந்தார்.
ஆண்டிமடம்:
டிராக்டர் சக்கரம் ஏறியது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபிரகாசம்(வயது 67). இவருடைய மனைவி ரெஜினாமேரி(60). இவர்கள் அருகில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு, மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மொபட்டை தங்கபிரகாசம் ஓட்ட ரெஜினாமேரி பின்னால் அமர்ந்திருந்தார். பெரியதத்தூரில் இருந்து ரெட்டிதத்தூர் செல்லும் மண் சாலையில் சென்றபோது திடீரென சறுக்கியதில் மொபட்டில் இருந்து இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சாலையில் விழுந்த ரெஜினாமேரி மீது அந்த வழியாக வந்த டிராக்டரின் சக்கரம் ஏறி இறங்கியது.
சாவு
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தங்கபிரகாசம் காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு வந்து ரெஜினா மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கபிரகாசம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் கணவர் கண்முன்னே டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.