பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டு தரக்கோரிக்கை

Update: 2023-05-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அந்த பெண் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அக்கராயபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் லலிதா(வயது 26) என்பது தொியவந்தது. இவருக்கும், திருக்கோவிலூர் பகுதி பாடியந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன்(36) என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அஸ்வின்(3) என்ற ஆண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக லலிதா கணவரை பிரிந்து அக்கராயபாளையத்தில் உள்ள தன் தாய் வீட்டில் கடந்த ஒரு வருடங்களாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20-4-2023 அன்று வீட்டில் லலிதா தனியாக இருந்தபோது குடிபோதையில் வந்த முருகன் குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டார். இது குறித்து லலிதா கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கணவரிடம் இருந்து தனது குழந்தையை மீட்டு தரக்கோரி லலிதா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தொியவந்தது. இதையடுத்து லலிதாவிடம் போலீசார் உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்