பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு வெளியே பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை குறைந்த எண்ணிக்கையில் போலீசார் உள்ளே அனுமதித்து வந்தனர். அவர்களிடம் கலெக்டர் அருண்தம்புராஜ் மனுக்களை பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுத்து வந்தார்.
அப்போது அவர் ஒரு பெண் திடீரென தான் கையில் கொண்டு வந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த ஊழியர்கள் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மீட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.
விசாரணையில், அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மனைவி ராஜலட்சுமி (வயது 38) என்பது தெரிந்தது. வீட்டில் தனியாக இருந்த தன்னை 3 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், இது பற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார், அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.