திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பஞ்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவரது மனைவி சகுந்தலா (48). இவர்கள் திருப்பத்தூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டு தீப்பெட்டியை எடுத்து சென்றனர்.
பின்னர் தீப்பெட்டியை கொடுப்பது போல் வந்தனர். அதில் ஒருவன் மோட்டார்சைக்கிள் தயாராக நின்றுகொண்டான். மற்றொருவன் கடையில் இருந்த சகுந்தலாவிடம், டாஸ்மாக் கடை எங்கு உள்ளது என்று கேட்டுக் கொண்டே சகுந்தலாவின் கழுத்தில் இருந்த 4¾ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சகுந்தலா திருடன், திருடன் என கத்தியபடியே சிறிது தூரம் ஓடினார். அனால் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பியோடிய நபர்களை தேடி வருகிறார்கள்.