மண்எண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் அளித்த மனுவில், கோவை உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் இருந்த பெரிய மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு சாலை அமைக்கப்பட்ட பிறகும் சாலையின் இருபுறமும் மக்களுக்கு பயன் தரும் வகையில் மரங்களை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் ஆங்காங்கே மரங்களை நட்டு வருகிறோம். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் கோவை உக்கடம் முதல் பொள்ளாச்சி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மக்களுக்கு பயன் தரும் வகையில் மரங்களை நடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மரங்களை நடுவதற்கான முழு ஒத்துழைப்பையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த சுல்தான் (வயது 36) என்ற பெண் ஒருவர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். அவரை போலீசார் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பரிசோதனை செய்தனர். அப்போது அவரிடம் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு வந்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், சுல்தான் கோவை புலியகுளம் பகுதியில் ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறேன். இந்த நிலையில் வீட்டில் உரிமையாளர் இறந்துவிட்டதால், உறவினர்கள் வீட்டை காலி செய்யுமாறு கூறுகின்றனர். மேலும் பணத்தை திரும்ப தரவும் மறுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து மனு அளிக்க அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இடத்தை அபகரிக்க முயற்சி
சூலூர் மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், மயிலம்பட்டி பகுதியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் இடத்தை அபகரிக்க அரசியல் கட்சியினர் என்று கூறிக்கொண்டு சிலர் முயன்று வருகின்றனர். அவர்கள் எங்கள் வீட்டை சேதப்படுத்தி, 120 கோழிகளை கொன்று, பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.
திராவிட தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்தவர்கள் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.