தோட்டத்துக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்; 300 வாழைகள் சேதம்
களக்காடு அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்தன. இதில் 300 வாழைகள் சேதம் அடைந்தது.
களக்காடு:
களக்காடு அருகே கீழவடகரை பூலாங்குளம் பத்து பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஏராளமான காட்டு பன்றிகள் தோட்டங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சாய்த்து, அவற்றின் குருத்துகளை தின்று சேதப்படுத்தின. இதில் 300-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழை மரங்கள் நாசமாகின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.