மேஸ்திரியை வெட்டி கொலை செய்த மனைவி
வாலாஜா அருகே கணவர் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்ததால், ஆத்திரம் அடைந்த மனைவி அவரை வெட்டி கொலை செய்தார்.
வாலாஜா
வாலாஜா அருகே கணவர் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்ததால், ஆத்திரம் அடைந்த மனைவி அவரை வெட்டி கொலை செய்தார்.
குடித்து விட்டு தகராறு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கலைச்செல்வி (38), இவர் தனியார் ஷூ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஏழுமலைக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் ஏழுமலைக்கும், அவரது மனைவி கலைசெல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் ஏழுமலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வெட்டி கொலை
மேலும் கலைச்செல்வியை தொடர்ந்து திட்டியும், அடித்தும் உள்ளார். அப்போது தன்னை தாக்க வந்த ஏழுமலையிடம் இருந்து காப்பாற்றி கொள்வதற்காக கலைச்செல்வி அருகில் இருந்த கத்தியை எடுத்து ஏழுமலையின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் ஏழுமலை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் ஏழுமலையின் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிேரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கலைச்செல்வியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்காப்பிற்காக கணவனை கத்தியால் வெட்டியதில் அவர் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்தனர்.
கணவனை மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் ஒழுகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.