கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்தார்.
கணவர் சாவு
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பழமங்கலம் கிராமம் குட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 74). தேங்காய் வியாபாரி. அவருடைய மனைவி முத்தாயம்மாள் (72). இவர்களுக்கு மகனும், பேரன், பேத்திகளும், கொள்ளு பேரன், பேத்திகளும் உள்ளனர். இவர்களுடன் ரங்கசாமியும், முத்தாயம்மாளும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரங்கசாமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த ரங்கசாமிக்கு உடல் நிலை மோசமானது. மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.
மனைவியும் சாவு
இதைத்தொடர்ந்து ரங்கசாமி உடலுக்கு அவரது உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவே அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
மேலும் கணவர் இறந்ததால் முத்தாயம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் சோகத்துடன் காணப்பட்டார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் முத்தாயம்மாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரும் இறந்தார்.
சாவிலும் இணைபிரியாத தம்பதி
இதையடுத்து அவரது உடலுக்கும் இறுதி சடங்கு செய்தனர். அதன்பின்னர் நேற்று காைல கணவனையும், மனைவியையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். திருமணம் ஆகி 55 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரே நாளில் கணவனும், மனைவியும் இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ரங்கசாமியும், முத்தாயம்மாளும் தங்கள் வாழ்நாளில் ஒரு நாளும் சண்டையிட்டது கிடையாது என்றும், வாழ்க்கையில் இணைபிரியாத இந்த தம்பதி சாவிலும் இணைபிரியவில்ைல எனவும் உறவினர்கள் பேசிக்கொண்டனர்.