மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

Update: 2022-12-04 18:48 GMT

தொடர்மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அத்துடன் தடுப்பணைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று காலையில் சாரல் மழையாக விட்டு, விட்டு பெய்ய தொடங்கியது.

அதேநேரம் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருந்தன. இதனால் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ச்சியான சூழலே நீடித்தது. பின்னர் மதியம் 1 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்த மழையால் நாகல்நகர், வாணிவிலாஸ் மேடு, பழனி பைபாஸ் சாலை, திருச்சி சாலை, மதுரை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

பொதுமக்கள் அவதி

பகல் முழுவதும் விட்டு, விட்டு கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பொதுவாக வார இறுதி விடுமுறை தினத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை பொதுமக்கள் வாங்குவார்கள். அதன்படி விடுமுறை தினமான நேற்று காலை திண்டுக்கல்லில், கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் தங்களின் வீடுகளுக்கு பொதுமக்கள் திரும்பி சென்றனர். இதனால் கடைவீதிகளில் நேற்று கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. மேலும் பகல் முழுவதும் மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதன்படி, பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, வேடசந்தூர், வடமதுரை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்