குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்

Update: 2022-07-01 13:29 GMT

குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

சாரல் மழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

நேற்று முன்தினம் மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை மற்றும் குற்றாலத்தில் தொடர் சாரல் மழை காரணமாக ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் சிறு, சிறு கற்கள் மற்றும் மரத்துண்டுகள் விழுந்தன. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். நள்ளிரவுக்கு மேல் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

உற்சாக குளியல்

நேற்று காலையில் சாரல் மழை குறைந்தது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஐந்தருவியில் அதிக தண்ணீர் வரும்போது ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள படகு குழாமில் படகு சவாரி நடத்தப்படும். தற்போது மழை இல்லாததால் படகு குழாமிற்கு தண்ணீர் மிகவும் குறைவாகத்தான் வருகிறது. எனவே, படகு சவாரியும் நடத்தப்படவில்லை.

சீசன் நிலவரம்

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

ஆனால், சீசன் நேரத்தில் உள்ள சூழல் போன்று இல்லை என்றும், இது புயல் நேரத்தில் மழை பெய்யும்போது ஏற்படும் சூழல் போல உள்ளது என்றும் இப்பகுதியினர் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்