தேடப்பட்ட வாலிபர் குடியாத்தம் கோர்ட்டில் சரண்

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் குடியாத்தம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2023-06-20 16:34 GMT

குடியாத்தம்

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் குடியாத்தம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

முன்விரோதம்

கணியம்பாடியை அடுத்த சின்ன பாலம்பாக்கம், கும்பங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70), விவசாயி. இவரது மகன்கள் குமரவேல் (45), ரமேஷ் (41). இவர்களில் ரமேஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அண்ணன், தம்பி இடையே பரம்பரை சொத்தை பிரிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரவேலின் மகன் அருண்குமார் (23), தனது நண்பர்களான குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையை சேர்ந்த ஹரி, கார்த்திக் மற்றும் ஒரு வாலிபருடன், ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர் கொலை

இதில் ரமேஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ரமேஷின் மனைவி ராஜகுமாரி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிவு செய்து அருண்குமார் உள்பட 2 பேரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

கோர்ட்டில் சரண்

மேலும் தலைமறைவாக இருந்த ஹரி என்ற அரவிந்தன், கார்த்திக் ஆகியோரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் இன்று இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரி என்ற அரவிந்தன் (20) என்பவர் குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) ஜெய் கணேஷ் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்