குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன

கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்ட குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

Update: 2022-09-04 17:07 GMT

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை வந்தடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

இந்த வெள்ளநீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதன் காரணமாக அங்குள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம், அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன

கடந்த ஒரு வாரமாக மேற்கண்ட கிராமங்களை சூழ்ந்த வெள்ளநீர் தற்போது மெல்ல, மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அப்போது நாதல்படுகை கிராமத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து கிடந்தன. மேலும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருந்த ஒரு கொட்டகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

பயிர்கள் நாசம்

மேலும், மேற்கண்ட கிராமங்களில் சுமார் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி, பருத்தி, வெண்டைக்காய், கத்திரி, தக்காளி உள்ளிட்ட தோட்ட பயிர்களும், சாமந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட மலர் செடிகளும் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. இதனை கண்டு விவசாயிகள் பெரும் துயரம் அடைந்தனர். இதேபோல கடந்தமுறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் இந்த கிராமங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதனால், அந்த கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

சாலைகள் பெரும் சேதம்

மேலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் பெருத்த சேதம் அடைந்துள்ளன. சாலைகள் தண்ணீரில் அரிக்கப்பட்டு பெருத்த சேதம் அடைந்துள்ளன. ஆகவே, மேற்கண்ட கிராம பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்