விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
கிணத்துக்கடவு அருகே விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி சிறைபிடிப்பு
கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர்.10 முத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியை அருகில் வீடுகளும், விளைநிலங்களும் உள்ளன. இந்த நிலையில் இந்த கல்குவாரியில் விதிகளை மீறி அதிக வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடி வைப்பதாகவும், இதனால் வீடுகள் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி சேர்ந்த பொது மக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென கல்குவாரியில் இருந்து பாறை கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து முற்றுகையிட்டனர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம்
அப்போது கூறிய பொதுமக்கள் கூறியதாவது:-கல்குவாரியில் இரவு நேரங்களிலும் பாறைகளை வெடி மருந்து வைத்து அதிகளவு சத்தில் வெடிப்பதால் எங்களது வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் லாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் பாரங்களை ஏற்றிச் செல்வதால் சாலைகள் சேதம் அடைகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்றனர். அதற்கு வருவாய்துறையினர் கூறும்போது:- உங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி கொடுங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.