அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்

கோத்தகிரி அருகே கிராமத்திற்கு முறையாக இயக்காததை கண்டித்து, அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-06 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே கிராமத்திற்கு முறையாக இயக்காததை கண்டித்து, அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பஸ்

கோத்தகிரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கெங்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் இருந்து இரவு 8 மணி மற்றும் 8.45 மணிக்கு கெங்கரைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 8.45 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ், இரவில் கெங்கரை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 6.10 மணிக்கு கோத்தகிரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக இரவு நேரத்தில் இயக்கப்படும் 2 பஸ்களில் ஒன்று ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. கடைசி பஸ் 8.30 மணிக்கு இயக்கப்பட்டு வருவதாகவும், கெங்கரை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்படும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

மேலும் அரசு பஸ் முறையாக இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று கெங்கரைக்கு இரவு 8.45 மணிக்கு அரசு பஸ்சை இயக்க வேண்டும், காலை 6.10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கூட்டாடாவில் இருந்து கெங்கரை வழியாக கோத்தகிரிக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஞானபிரகாஷ், சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை நேரத்தில் மீண்டும் பஸ் சேவை வழங்கவும், கடைசி பஸ்சை இரவு 8.45 மணிக்கு இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் சமரசம் அடைந்த கிராம மக்கள் அரசு பஸ்சை விடுவித்து, அங்கிருந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்