ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-20 21:50 GMT

தாமரைக்குளம்:

பணி வழங்கவில்லை

அரியலூர் மாவட்டம், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்டு ஏழு கிராமங்கள் உள்ளன. இதில் 4 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூமுடையான்பட்டி, தலையாரி குடிக்காடு, நுறையூர் ஆகிய கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் செய்தனர். அப்போது தங்கள் கிராமங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க அரசாணை வரவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பூமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பணி வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட மற்ற கிராமங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்குவதை போல் தங்கள் கிராமத்திற்கும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்காத கிராம மக்களுக்கும் பணி வழங்கப்படும், என்று கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஒன்றிய அலுவலக பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

முறையாக வேலை வழங்க...

கடந்த ஆண்டும் இதேபோன்று பூமுடையான்பட்டி கிராம மக்கள் போராடி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் எங்களது உரிமைகளை போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. ஏன் இந்த பாகுபாடு என்பது தெரியவில்லை. வரும் காலங்களில் முறையாக வேலை வாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்