வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்

மயிலாடுதுறை அருகே வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்

Update: 2023-06-14 18:45 GMT


அகில பாரத இந்து மகாசபா கோவில் பாதுகாப்பு பிரிவு மாநிலத்தலைவர் ராம.நிரஞ்சன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது. சமயக்குரவர்களால் பாடல்பெற்ற இக்கோவில் கடந்த 2012-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் திருப்பணி வேலைகள் தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் இந்து மகாசபா சார்பில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கை விடுத்ததையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு அரசு சார்பில் ரூ.36 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு கோபுரம் மட்டும் வர்ணம் பூசப்பட்ட நிலையில் வேறு எந்த பணியும் நடக்கவில்லை. வீரட்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள வழிக்கரையான் என்கிற பாலசாஸ்தா கோவில் மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. ஐயப்பன் சுவாமி இங்குதான் பிறந்தார் என்பது ஐதீகம். எனவே வழிக்கரையான் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து திருப்பணி வேலைகளை தொடங்கி, வீரட்டேஸ்வரர் மற்றும் வழிக்கரையான் ஆகிய 2 கோவில்களிலும் திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்