திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.;

Update: 2023-05-29 00:04 GMT

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

சாப விமோசனம்

விசாக திருநாளான 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்