கைதான 5 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது

கைதான 5 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது

Update: 2022-10-25 18:45 GMT

கோவை

கோவையில் காரில் கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காரில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை விரைந்து வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். 2 நாட்களாக அவர் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். மேலும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

என்ஜினீயர்

கார் வெடித்து சிதறிய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டபோது அந்த இடத்தில் ஆணிகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) உள்ளிட்டவை கிடந்தன.

இதற்கிடையே காரில் உடல் கருகி இறந்து கிடந்தது கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர். தெருவை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

வீடியோவில் பதிவான காட்சி

இதையடுத்து ஜமேஷா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஜமேஷா முபின் உள்பட 5 பேர் வெள்ளை நிறத்திலான ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த மூட்டையில் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள்? என்பதை கண்டறிய, ஜமேஷா முபின் உடன் இருந்தவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

இந்தநிலையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற மர்ம பொருட்கள் என்ன? சதிச்செயலுக்கு பயன்படுத்த அந்த பொருளை எடுத்துச் சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.

உபா சட்டம் பாய்ந்தது

இதற்கிடையே கைது செய்யப்பட்ட முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா) கீழ் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைதான 5 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்