அலகு குத்தி லாரி, கிரேனை இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி அலகு குத்தி லாரி, கிரேனை இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மிளகாய் பொடி அபிஷேகம் செய்தும் வழிபட்டனர்.

Update: 2022-07-23 17:17 GMT

செஞ்சி

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அந்தவகையில் செஞ்சி பி ஏரிக்கரையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 49-வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று காலையில் செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் 10 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம், சக்திவேல் அபிஷேகம், மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், முழுவேந்தல், தீமிதித்தல் ஆகியவையும் நடைபெற்றது.

நேர்த்திக்கடன்

இதனை தொடர்ந்து மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமிகள் வைக்கப்பட்டு, முதுகில் அலகு குத்தி பக்தர்கள் இழுத்து வந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கிரேன், பொக்லைன் எந்திரம், வேன், லாரிகளை இழுத்து வந்தனர்.

சிலர் லாரிகளில் கட்டைக்கட்டி முதுகில் அலகு குத்தி தொங்கியபடி (பறவை காவடி ஊர்வலம்) வந்தனர். இதை பார்த்த பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள், எடைபணி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெரியகரம்

இதேபோல் செஞ்சி பெரியகரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவிலில் 50-வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் 108 பால்குட ஊர்வலமும், பாலாபிஷேகமும், காவடி பூஜையும் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மார்பு மீது உரலை வைத்து மாவு இடித்தல், கருட செடல், பறக்கும் செடல் விளையாடுதல், சக்தி கரகம், தீ மிதித்தல் ஆகியவை நடந்தது. பின்னர் மாலையில் 17 அடி உயர தேரில் சிவசுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேரை இழுத்து வந்தனர். இதேபோல் பக்தர்கள் மினி வேனில் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தனர். விழா ஏற்பாடுகளை செஞ்சி பெரியகரம் கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

திண்டிவனம்

திண்டிவனம் கிடங்கல்-1 அன்பநாயக ஈஸ்வரர் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகப்பெருமானுக்கு 56-ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால்காவடி, செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 20 பக்தர்கள் மீது மிளகாய் பொடி அபிஷேகம் செய்து வழிபட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தியும், வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்