இரு தரப்பினர் பயங்கர மோதல்; சாலை மறியலால் போலீஸ் குவிப்பு

திசையன்விளை அருகே கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2022-09-20 19:51 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவில் கொடை விழா

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த உவரி அருகே இடையன்குடி கல்லாம் பரம்பு பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

தற்போது இந்த கோவிலில் கொடை விழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று மதியம் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது.

பட்டாசு வெடித்ததில் தகராறு

இந்த ஊர்வலமானது இடையன்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது ஊா்வலத்தில் வந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். அந்த பட்டாசானது கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் விழுந்ததாக தெரிகிறது.

அப்போது, அங்கு நின்ற இடையன்குடியைச் சேர்ந்த ஜோபன் சாமுவேல் (வயது 35) என்பவர், ஊர்வலத்தில் வந்தவர்களிடம் தட்டிக் கேட்டார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஜோபன் சாமுவேல் காயம் அடைந்தார்.

சாலை மறியல்

இதையடுத்து கிறிஸ்தவ ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. இந்த சத்தத்தை கேட்ட அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார், உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், வருவாய் ஆய்வாளர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் அயூப்கான் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீஸ் குவிப்பு

தொடர்ந்து இருதரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இனிவரும் காலங்களில் கொடை விழா, தசரா விழா எதுவாக இருந்தாலும் இடையன்குடியில் கிறிஸ்தவ ஆலயம் பகுதிக்கு வரும்போது அமைதியாக செல்ல வேண்டும். பட்டாசு வெடிக்கவோ, ஆட்டம், பாட்டமோ இருத்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் மாலையில் கொடை விழாவில் சாமியாடிகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்த சம்பவத்தால் அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பரபரப்பு

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஜோபன் சாமுவேல் மனைவி வின்சி ரெபேக்கா உவரி போலீசில் புகார் செய்தார். அதில் எனது கணவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் அணிந்து இருந்த நகைகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திசையன்விளை அருகே கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் பயங்கரமாக மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்