ஆடு திருடிய லாரி உரிமையாளர்உள்பட 2 பேர் கைது
வேடசந்தூர் அருகே ஆடு திருடிய லாரி உரிமையாளர் உள்பட 2 பேரை செல்போனை வைத்து போலீசார் துப்பு துலக்கி பிடித்து கைது செய்தனர்.
ஆடு திருட்டு
வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 30). விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் ஆடு திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆடு கட்டி வைத்திருந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றினார்.
செல்போன் மூலம் சிக்கினர்
இதுகுறித்து வேடசந்தூர் ேபாலீஸ் நிலையத்தில் ஜெகதீஸ்வரன் புகார் கொடுத்தார். போலீசாரிடம் அந்த செல்போனை ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த செல்போனை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அதில் அந்த செல்போன் எண்ணின் உரிமையாளர் விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவியின் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
அதில் ஆட்டை திருடியவர்கள், நாயக்கனூரை சேர்ந்த போஸ் (32), அவர் லாரி உரிமையாளர் என்றும், மற்றொருவர் பொக்லைன் டிரைவர் தோப்பூரை சேர்ந்த ஜெயபாலாஜி (22) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து கைது செய்தனர். போஸ் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.