மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

Update: 2024-11-17 21:16 GMT

தேனி,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழுவில் 'சின்ன சுருளி' என்று அழைக்கப்படும் மேகமலை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேகமலை அடிவாரத்தில் இந்த அருவி உள்ளது. மேகமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, கடந்த 2 மாதங்களாக மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து சீராக விழுந்தது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேகமலை வனப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நேற்று அதிகாலை மேகமலை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்றும் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. மாறாக வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவியது.

இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். மேலும் அருவி பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் நேற்று மேகமலை அருவிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்